பிராந்திய ஆதரவு வழிமுறை EECA திட்டத்தின் ஒரு பகுதியாக, Digital Spark மானியத் திட்டத்தில் நிதியுதவி பெற்ற சிலரின் பணிகளை அறிமுகப்படுத்தும் நேர்காணல் தொடரில் இதுவும் ஒன்று. Metamorphosis Foundation மற்றும் TechSoup ஆகியவை CIVICUS உடன் இணைந்து, உலகளாவிய தெற்குப் பகுதிகளை உள்ளடக்கும் டிஜிட்டல் ஜனநாயக முன்முயற்சியின் (DDI) கீழ் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. உள்ளடக்கப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது Global Voices தளத்தில் வெளியிடப்படுகிறது.

உக்ரைன் போர், இளைஞர்களுக்கும் பொது வாழ்க்கை மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் அவர்கள் பங்கேற்பதற்கும் எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. இடப்பெயர்வு, தவறான தகவல்கள் ஆகியவற்றுடன், அரசியல் பங்கேற்பு, பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளன. அதே நேரத்தில், அரசியல் முடிவுகளுக்குப் பங்களிக்கவும் தங்கள் சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் இளைஞர்கள் பயன்படுத்தக்கூடிய வழிகள் இன்னும் உள்ளன.

போர் நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் இன்னும் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம், பொதுக் கலந்தாலோசனைகளில் பங்கேற்கலாம் அல்லது இணையத்தில் தங்கள் தேவைகளுக்காகக் குரல் கொடுக்கலாம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மேலும், இடம்பெயர்ந்தவர்கள், சிறுபான்மையினர், கிராமப்புறச் சமூகங்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் குரல் இருக்கிறது என்பதை அறிந்திருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கான வழியைக் கண்டறியச் சிரமப்படுகின்றனர்.

2026-ல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் டிஜிட்டல் ஜனநாயகத்தின் இந்தப் புதிய காலத்தில் தங்கள் குரலைக் கண்டறிவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் பெற உதவும் திட்டத்தை உள்ளூர் அரசு சாரா அமைப்பான beYOUnd செயல்படுத்தியது. அவர்களது முன்முயற்சி குறித்து மேலும் அறிய, beYOUnd அமைப்பின் தலைவி யெவ்ஹெனியா ஹோலோவென்கோவுடன் Global Voices மின்னஞ்சல் வழியாக நேர்காணல் நடத்தியது. தெளிவாகவும் சுருக்கமாகவும் இருப்பதற்காக நேர்காணல் திருத்தப்பட்டுள்ளது.

Global Voices (GV): உங்கள் அமைப்பைப் பற்றியும், Digital Sparks திட்டத்தில் ஈடுபட நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள் என்றும் கூறுங்கள்.

யெவ்ஹெனியா ஹோலோவென்கோ (YH): beYOUnd என்பது உக்ரைனைத் தளமாகக் கொண்டு இளைஞர்களால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்பு. நாங்கள் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஒரு குழுவாகச் செயல்பட்டு வந்தாலும், 2025 அக்டோபரில் அமைப்பு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள்—குறிப்பாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் கடினமான சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இளைஞர்கள்—சமூகத்துடன் ஒன்றிணைதல், தங்கள் திறனை நிறைவேற்றுதல் மற்றும் குடிமை வாழ்வில் அதிகம் ஈடுபடச் செய்வதே எங்கள் நோக்கம்.

எங்கள் பெயர் எங்கள் கொள்கையைப் பிரதிபலிக்கிறது: அது உங்களிடமிருந்து தொடங்குகிறது; உங்களையும் தாண்டிச் செல்கிறது! நாங்கள் பணியாற்றும் இளைஞர்கள் எதிர்கொண்ட அதே சவால்களை அனுபவித்த இளைஞர்களே எங்கள் குழுவில் பெரும்பான்மையாக உள்ளனர். நாங்கள் செய்யும் அனைத்தையும் அணுகும் விதத்தை அது வடிவமைக்கிறது.

டிஜிட்டல் ஜனநாயகமும் குடிமைச் செயல்பாட்டுக்கான வெளியும் உக்ரைன் இளைஞர்களுக்கு இப்போது ஆதரவு தேவைப்படும் துறைகளாக இருப்பதால்தான் Digital Sparks முன்முயற்சியில் சேர்ந்தோம். போர்க் காலத்தில் மீண்டு நிற்கும் திறனுக்கும், பாதுகாப்பாகவும் விவரமறிந்தும் இணையத்தில் பங்கேற்பதற்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. இது எங்கள் நோக்கத்துடன் முழுமையாகப் பொருந்தியது.

GV: உங்கள் சமூகத்தில் இருந்த எந்தப் பிரச்சினை அல்லது சவால் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள உங்களைத் தூண்டியது?

YH: பல உக்ரைன் இளைஞர்கள், குறிப்பாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் (IDPs), மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கவும், தகவலறிந்திருக்கவும், குடிமைச் செயல்பாடுகளில் ஈடுபடவும் டிஜிட்டல் தளங்களை நாட வேண்டிய நிலையைப் போர் ஏற்படுத்தியுள்ளது. அதை பாதுகாப்பாகச் செய்வதற்கான கருவிகள் அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

ஒரு இடைவெளி இருப்பதை நாங்கள் கண்டோம்: இளைஞர்கள் தகவல்களைப் பயன்படுத்தினார்கள், இணையத்திலும் பங்கேற்றார்கள். ஆனால் ஊடக அறிவு, டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அல்லது தங்கள் குரலால் எதையாவது மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

இடம்பெயர்ந்த மற்றும் ஒதுக்கப்பட்ட இளைஞர்களிடம் நடைமுறைக்குப் பயன்படும் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் குடிமைப் பங்கேற்புத் திறன்களை வளர்த்து இந்த இடைவெளியைப் போக்க விரும்பினோம். உக்ரைனில் இளைஞர்களின் பங்கேற்புடன் டிஜிட்டல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது எப்படி என்பது பற்றிய யோசனைகளைப் பகிர அவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினோம்.

GV: இந்தத் திட்டத்தில் பங்கேற்றபோது உங்கள் அமைப்பு செயல்படுத்திய முக்கிய மாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் என்ன?

YH: “டிஜிட்டல் காலத்தில் ஜனநாயகத்தின் குரல்கள்” திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பாதுகாப்பு, மின்னணுப் பங்கேற்பு மற்றும் பொய்த் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தினோம். அது 8,500-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

கல்வி சார்ந்து, டிஜிட்டல் ஜனநாயகம், ஊடக அறிவு, குடிமை நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்து 3 இணையக் கருத்தரங்குகளையும் 3 பயிலரங்குகளையும் நடத்தினோம். அவற்றில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தலைநகர் கீவில் நேரடியாகச் சந்தித்து உறவுகளை ஏற்படுத்தும் நிகழ்வையும் நடத்தினோம். இதே தலைப்புகளை மையமாகக் கொண்டு தொடர்புகளை உருவாக்க 27 பேர் நேரில் ஒன்றுகூடினர். இணையவழிக் கற்றலைத் தொடர்ந்து, உண்மையான நேருக்கு நேர் உறவுகளையும் கருத்துப் பரிமாற்றத்தையும் அவர்கள் வளர்த்துக்கொண்டனர்.

இணையவழிச் சென்றடைதலையும் நேரடி சமூக உருவாக்கத்தையும் இணைத்த இந்த நடவடிக்கைகள், புதிதாகப் பெற்ற அறிவைச் செயல்படுத்துவதற்கான அறிவையும் தொடர்பு வலையையும் இளைஞர்களுக்கு வழங்கின.

GV: இந்தத் திட்டத்தில் நீங்கள் பங்கேற்றது, உங்கள் அமைப்பின் பயனாளிகளிடமும் நீங்கள் சேவையாற்றும் சமூகத்திடமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? எடுத்துக்காட்டுகளைக் கூறுங்கள்.

YH: பயனாளிகள் தங்கள் சமூகத்தில் தங்களுக்குள்ள இடத்தைப் பார்க்கும் விதத்தை “ஜனநாயகத்தின் குரல்கள்” மாற்றியமைத்தது. ஒரு பங்கேற்பாளர் கூறியதுபோல், “என் சமூகத்துடன் இணைந்து செயல்படவும் முக்கியமான முடிவுகளில் பங்கேற்கவும் நான் பயன்படுத்தக்கூடிய புதிய டிஜிட்டல் கருவிகளைக் கண்டறிந்தேன்.”

தங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது மற்றும் அன்றாட வாழ்வில் டிஜிட்டல் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டதே மிகவும் பயனுள்ள பகுதியாக இருந்ததாக மற்றவர்கள் கூறினர்.

ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக வாதிடுவதற்கும் பரந்த குடிமைச் செயல்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை இறுதியாகப் புரிந்துகொண்டதாகப் பலர் குறிப்பிட்டனர். தங்கள் சொந்த முன்முயற்சிக்கான உண்மையான திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதையும் கற்றதாகக் கூறினர். குழுவாகச் செயல்பட்டதன் மூலம் இந்தத் திறன்கள் நடைமுறைக்கு வந்தன.

மற்றொரு பங்கேற்பாளர் கூறியதுபோல், “ஒரு பிரச்சினையை வரையறுக்கவும், அதன் காரணங்களைக் கண்டறியவும், அதைத் தீர்ப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளைத் திட்டமிடவும் கற்றுக்கொண்டேன். ஒரு கோரிக்கைக்காக வாதிடுவது என்றால் என்ன, அது ஒரு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை எப்படி முன்னெடுக்க முடியும் என்பதையும் மேலும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.”

உள்ளூர் அளவில் மாற்றத்தின் மீது தாக்கம் செலுத்த தங்களுக்குள்ள திறனைப் பலர் பார்க்கும் விதத்தை இது மாற்றியது.

GV: இந்தத் திட்டத்தில் பங்கேற்றதன் மூலம், டிஜிட்டல் ஜனநாயகம் மற்றும் குடிமைச் செயல்பாட்டுக்கான வெளி குறித்த உங்கள் அறிவு, விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எவ்வாறு மாறியுள்ளது?

YH: இந்தத் திட்டத்தை வழிநடத்தியதால், டிஜிட்டல் பாதுகாப்பும் ஜனநாயகப் பங்கேற்பும் எவ்வளவு நெருக்கமாக இணைந்துள்ளன என்பது பற்றிய எங்கள் புரிதல் ஆழமடைந்தது. இணையவெளியில் பாதுகாப்பாகச் செயல்படுவதற்கான திறன்களை முதலில் வழங்காமல், இளைஞர்களை இணையவழிக் குடிமை வாழ்வில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்த முடியாது.

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் குடிமைப் பங்கேற்பு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியது, இப்போது நாங்கள் பயன்படுத்தும் நடைமுறைக் கருவிகள் குறித்த எங்கள் புரிதலை விரிவுபடுத்தியது. beYOUnd அமைப்பின் திட்டங்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கும் விதத்தையும் அது விரிவுபடுத்தியது.

திறன் வளர்ப்பை மேலும் கட்டமைப்பு ரீதியாகப் பார்க்கவும் அது எங்களைத் தூண்டியது. அதாவது, பயனாளிகளுக்கு என்ன கற்பிக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக மட்டும் செயல்படாமல், நீண்ட காலத்துக்கு எங்கள் அமைப்பின் மீண்டு நிற்கும் திறனை எப்படி வளர்ப்பது என்பதையும் சிந்திக்க வைத்தது.

GV: இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் எடுத்துச் செல்லும் மிகவும் பயனுள்ள பாடங்களும் அனுபவங்களும் என்ன?

YH: நடைமுறையில் நேரடியாகச் செய்து பார்க்கும் உள்ளடக்கத்தை உண்மையான கலந்துரையாடலுடன்—இணையக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் நேரடியாக உறவுகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுடன்—இணைத்தது, ஏதேனும் ஒரு முறையை மட்டும் பயன்படுத்தியதைவிட மிகச் சிறப்பாகப் பலனளித்தது என்பதே மிகப்பெரிய பாடம். பங்கேற்பாளர்கள் தகவல்களை உள்வாங்கியதுடன் நின்றுவிடவில்லை. அதைப் பயன்படுத்திச் செயல்படத் தேவையான உறவுகளையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டனர். குறிப்பாக கீவில் நடந்த நேரடிக் கருத்துப் பரிமாற்றம் இதற்கு உதவியது.

எளிமையான, தெளிவான, நடைமுறைக்குப் பயன்படும் உள்ளடக்கம் எவ்வளவு மதிப்புடையது என்பதையும் கற்றுக்கொண்டோம். கருத்தளவில் மட்டுமே இருக்கும் கோட்பாட்டைவிட, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய தகவல்களே தங்கள் மனதில் அதிகமாகப் பதிந்ததாகப் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து கூறினர்.

இறுதியாக, திட்டத்துடன் சேர்த்து எங்கள் சொந்தக் குழுவின் திறன்களையும் வளர்த்தது, பயனாளிகளுக்கு நாங்கள் வழங்கும் திறன்களைப் போலவே அமைப்பின் மீண்டு நிற்கும் திறனும் முக்கியமானது என்பதை எங்களுக்கு நினைவூட்டியது.

GV: அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் பெற்ற கற்றலையும் உருவாக்கிய டிஜிட்டல் திறனையும் உங்கள் எதிர்காலப் பணியிலும் சமூகத்திலும் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

YH: இந்தத் திட்டத்தில் கிடைத்த டிஜிட்டல் கருவிகள், கோரிக்கைகளுக்காக வாதிடுவதற்கான கட்டமைப்புகள் மற்றும் குடிமை நடவடிக்கைகளைத் திட்டமிடும் திறன்களை, இளைஞர்களுக்கான எதிர்காலத் திட்டங்களை நாங்கள் வடிவமைக்கும் விதத்தில் தொடர்ந்து இணைத்திருக்கத் திட்டமிட்டுள்ளோம். இது ஒரே முறை மட்டும் பேசப்படும் தலைப்பு அல்ல; இப்போது எங்கள் பணியின் நிரந்தரப் பகுதியாகிவிட்டது.

கீவில் நடந்த தொடர்புகளை உருவாக்கும் நிகழ்வின் மூலம் ஏற்பட்ட உறவுகளை நாங்கள் தொடர்ந்து வளர்க்க விரும்புகிறோம். ஒருமுறை ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து செயல்படும் சமூகமாக மாற்ற விரும்புகிறோம்.

அமைப்பு சார்ந்து, மீண்டு நிற்கும் திறன் மற்றும் நீண்டகாலச் செயல்திறன் தொடர்பாக நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தி, வளர்ந்து வரும் beYOUnd அமைப்பை வலுப்படுத்துகிறோம். இதன் மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களையும் இதைவிடப் பெரிய திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு மேலும் சிறப்பாகத் தயாராக இருப்போம்.