பிராந்திய ஆதரவு நடைமுறை EECA திட்டத்தின் ஒரு பகுதியாக, மெட்டமார்ஃபசிஸ் அறக்கட்டளையும் டெக்சூப்பும், சிவிகஸுடன் இணைந்து, உலகளாவிய தெற்குப் பகுதிகளை உள்ளடக்கும் டிஜிட்டல் ஜனநாயக முன்முயற்சியின் (DDI) கீழ் செயல்படுத்தும் டிஜிட்டல் ஸ்பார்க் மானியத் திட்டத்தில் மானியம் பெற்ற சிலரின் பணிகளை வெளிச்சமிட்டுக் காட்டும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதி இது. உள்ளடக்கப் பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ் குளோபல் வாய்சஸில் இது வெளியிடப்படுகிறது.

காலநிலை மாற்றம், எரிசக்திப் பற்றாக்குறை, மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களில் கஜகஸ்தானின் கிராமப்புறப் பெண்களும் அடங்குவர். குறிப்பாக நாட்டின் தெற்குப் பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையின் பெரும் சுமையை அவர்கள் தாங்குகின்றனர். அடர்த்தியான மக்கள்தொகை, விவசாயத்தைச் சார்ந்த பொருளாதாரம், பழமையான பாசனக் கட்டமைப்பால் ஏற்படும் நீர் இழப்பு ஆகியவற்றால் அங்கு இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது.

தெற்கு ஜாம்பில் பிராந்தியத்தில் உள்ள கிஸில்சாய் கிராமத்தில், தண்ணீர்ப் பற்றாக்குறை பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது. வீடுகள், தோட்டங்கள், கால்நடைகள் ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்காக அவர்கள் நாள்தோறும் பல மணி நேரம் வீட்டுக்கு வெளியே செலவிட வேண்டியுள்ளது. அவர்களின் கடின உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதும் இல்லை; அதற்குக் கூலி கிடைப்பதும் இல்லை. புவியியல் ரீதியாகத் தொலைவில் வசிப்பதால் தகவல்களையும் அரசுச் சேவைகளையும் பெறுவதற்கான வாய்ப்பும் குறைந்து, அவர்களின் நிலை மேலும் மோசமடைகிறது.

2026-ல், உள்ளூர் செயற்பாட்டாளரான நஸ்குல் ஐடபோசினோவா, அப்பகுதிப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் திட்டத்தைச் செயல்படுத்தினார். அரசுடன் இன்னும் பயனுள்ள, திறமையான முறையில் தொடர்புகொள்வது, தங்களது உழைப்பு மற்றும் பொருட்களின் செலவைக் கணக்கிடுவது, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூட்டு முயற்சிகளைத் திரட்டுவது ஆகியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவரது முன்முயற்சி குறித்து மேலும் அறிய, ஐடபோசினோவாவை குளோபல் வாய்சஸ் மின்னஞ்சல் வழியாக நேர்காணல் செய்தது. தெளிவாகவும் சுருக்கமாகவும் இருப்பதற்காக இந்த நேர்காணல் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

குளோபல் வாய்சஸ் (GV): உங்கள் அமைப்பைப் பற்றியும், டிஜிட்டல் ஸ்பார்க்ஸ் திட்டத்தில் ஈடுபட ஏன் முடிவு செய்தீர்கள் என்பதையும் கூறுங்கள்.

நஸ்குல் ஐடபோசினோவா (NA): கிஸில்சாயில் கிராமப்புறப் பெண்கள் தலைமையில் இயங்கும் சமூக முன்முயற்சியின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். வீடுகள், சிறிய பண்ணைகள், கால்நடைகள் மற்றும் பராமரிப்புப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் பணியின் நோக்கம். இப்பெண்கள் தகவல்கள், பொதுச் சேவைகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகளைப் பெறுவதிலும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

டிஜிட்டல் கருவிகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியான, நடைமுறைப் பயனை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் டிஜிட்டல் ஸ்பார்க்ஸ் திட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தோம். பல பெண்களிடம் ஏற்கெனவே ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஆனால் முன்பு அவற்றை முக்கியமாக தொலைபேசி அழைப்புகளுக்கும் வாட்ஸ்அப்புக்கும் மட்டுமே பயன்படுத்தினர்.

eGov சேவைகளைப் பெறுதல், சமூகப் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதல், பண்ணை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை நிர்வகித்தல், டிஜிட்டல் பாதுகாப்பைப் பேணுதல், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றுக்கான கருவிகளாக இந்தச் சாதனங்களை மாற்றுவதற்கு இத்திட்டம் ஒரு வாய்ப்பை உருவாக்கியது.

GV: உங்கள் சமூகத்தில் நிலவிய எந்தப் பிரச்சினை அல்லது சவால் இந்தத் திட்டத்தை நீங்கள் மேற்கொள்ளத் தூண்டியது?

NA: கிஸில்சாயில் நம்பகமான தண்ணீர் வசதி இல்லாததுதான் முக்கியச் சவால். குறிப்பாகக் கோடைக்காலத்தில், பகல் நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது அடிக்கடி நின்றுவிடுகிறது. இது தோட்டங்கள், கால்நடைகள், வீட்டு வேலைகள், குடும்பங்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வைப் பாதிக்கிறது.

இந்தச் சுமை பெண்கள் மீது அளவுக்கு அதிகமாக விழுகிறது. தண்ணீரைச் சேமித்துவைக்க அவர்கள் அதிகாலையில் எழுகின்றனர்; வீட்டு மற்றும் விவசாயத் தேவைகளுக்குத் தண்ணீர் சுமக்கின்றனர்; கால்நடைகளைப் பராமரிக்கின்றனர்; பாசனத்திற்கான தங்கள் முறை வரும்வரை காத்திருக்கின்றனர். இந்த வேலைகளில் பெரும்பாலானவற்றுக்குக் கூலி கிடைப்பதில்லை; அவை அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன; அவற்றுக்கான அங்கீகாரமும் அரிதாகவே கிடைக்கிறது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளைப் புகாரளிப்பதிலும் பெண்கள் தடைகளை எதிர்கொண்டனர். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் உள்ளூர் அமைப்புகளிடம் தங்களது கவலைகளைப் பயனுள்ள விதத்தில் எடுத்துரைக்கத் தேவையான அறிவு, ஆதாரம் மற்றும் தன்னம்பிக்கை பெரும்பாலும் அவர்களிடம் இல்லை.

GV: திட்டத்தில் பங்கேற்ற காலத்தில் உங்கள் அமைப்பு செயல்படுத்திய முக்கிய மாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் என்ன?

NA: கிராமப்புறப் பெண்கள் 10 பேருக்கு இத்திட்டம் 4 நடைமுறைப் பயிற்சி அமர்வுகளை நடத்தியது.

“உங்கள் தொலைபேசி வாட்ஸ்அப்பை விட மேலானது: உங்கள் வீட்டு உதவியாளராக ஸ்மார்ட்போன்” என்ற முதல் அமர்வில், ஸ்மார்ட்போன் நினைவூட்டல்கள், பண்ணை மற்றும் கால்நடைப் பணிகளுக்கான புகைப்பட நாட்குறிப்புகள், eGov சேவைகள், வலுவான கடவுச்சொற்கள், அடிப்படை டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது கற்றுக்கொடுக்கப்பட்டது.

“புத்திசாலித்தனமான நீர் மேலாண்மை: உங்கள் தோட்டம் தனக்குத் தாகமாக இருப்பதைச் சொல்லும்போது” என்ற 2-வது பயிலரங்கில், தண்ணீருக்கான உரிமைகள், தொடர்புடைய உள்ளூர் அதிகாரிகளின் பொறுப்புகள், நேரமும் GPS இருப்பிடமும் குறிக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி நீர் விநியோகத்தை வரைபடமாக்குவது ஆகியவற்றைப் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.

“எண்கள் பொய் சொல்வதில்லை: அனைத்தையும் கணக்கிட்டால் அதிகம் சம்பாதிக்கலாம்” என்ற 3-வது அமர்வில், கூலியில்லா உழைப்பைக் கணக்கில் பதிவு செய்வது மற்றும் பால் போன்ற விவசாயப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவைக் கணக்கிடுவது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. புத்திசாலித்தனமான பாசனத்தின் மூலம் மிச்சமாகும் நேரத்தின் பொருளாதார மதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

“நேர்மையான உடன்பாடு: ஒருவரை ஒருவர் நம்பத் தொழில்நுட்பம் உதவும்போது” என்ற 4-வது மற்றும் இறுதி அமர்வில், வருமானம் ஈட்டுவதற்குத் தேவைப்படும் நேரம் குறித்த திட்டங்களைப் பங்கேற்பாளர்கள் தயாரித்தனர்; உள்ளூர் ஆதரவு வலையமைப்புகளை வரைபடமாக்கினர்; சக பெண்களுக்கு வழிகாட்டுவது குறித்துப் பேசினர். மேலும், தண்ணீர் தொடர்பான கோரிக்கைகளை கூட்டாக முன்வைப்பதற்கும், பகிர்ந்து பயன்படுத்தும் புத்திசாலித்தனமான பாசனக் கட்டமைப்பை அமைப்பதற்கும் கூட்டுறவு அணுகுமுறையில் பணியைத் தொடங்க ஒப்புக்கொண்டனர்.

GV: திட்டத்தில் நீங்கள் பங்கேற்றது, உங்கள் அமைப்பால் பயனடைபவர்கள் மற்றும் நீங்கள் சேவையாற்றும் சமூகத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? எடுத்துக்காட்டுகளை வழங்குங்கள்.

NA: ஸ்மார்ட்போன்களைத் தகவல்தொடர்புச் சாதனங்களாக மட்டும் பார்க்காமல், சுயசார்பு, குடிமக்கள் பங்கேற்பு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கருவிகளாகப் பார்க்க இத்திட்டம் பங்கேற்ற பெண்களுக்கு உதவியது.

உதாரணமாக, குறிப்பிட்ட சில அதிகாரபூர்வ ஆவணங்களை இணையம் வழியாகக் கோருவதற்கு eGov சேவைகளைப் பயன்படுத்தலாம் என்பதைப் பெண்கள் கற்றுக்கொண்டனர். இதனால் நிர்வாக அலுவலகங்களுக்குச் செல்ல நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டிய தேவை குறைகிறது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளுக்குக் கட்டமைக்கப்பட்ட ஆதாரங்களை உருவாக்கவும் அவர்கள் கற்றுக்கொண்டனர். வறண்ட கால்வாய், உடைந்த குழாய் அல்லது மாசடைந்த நீராதாரத்தின் புகைப்படத்துடன் தேதி, இடம் மற்றும் எழுத்துபூர்வ விளக்கம் சேர்க்கப்பட்டால், கோரிக்கையை முன்வைப்பதற்கு அது இன்னும் பயனுள்ள ஆதாரமாகிறது.

கூலியில்லா உழைப்பு மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்பான பயிற்சி குறிப்பாகப் பயனுள்ளதாக இருந்தது. பங்கேற்பாளர்கள் தங்கள் நேரத்தின் மதிப்பைக் கணக்கிட்டதுடன், பால் உற்பத்தி மற்றும் பாசனப் பணிகளின் உண்மையான செலவை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டனர். கைகளால் செய்யப்படும் பாசனத்திற்கு மாதம் ஒன்றுக்கு 60 மணி நேரம் வரை ஆகலாம் என்பதை விவாதம் காட்டியது.

தங்கள் நேரத்திற்குப் பொருளாதார மதிப்பு உள்ளது என்பதையும், பகிர்ந்து பயன்படுத்தும் புத்திசாலித்தனமான பாசனத் தீர்வுகள் மூலம் வருமானம் ஈட்டுதல், கல்வி, ஓய்வு மற்றும் சமூகப் பங்கேற்புக்கு அதிக நேரம் கிடைக்கக்கூடும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர இது உதவியது.

குழுவினர் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்கும் நடைமுறையையும் தொடங்கினர். பயிற்சியில் பெற்ற அறிவை அக்கம்பக்கத்துப் பெண்களுடன் பங்கேற்பாளர்கள் 3 பேர் பகிரத் தொடங்கினர்.

GV: திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் டிஜிட்டல் ஜனநாயகம் மற்றும் குடிமக்கள் செயல்பாட்டுக்கான வெளி குறித்த உங்கள் சொந்த அறிவு, விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எவ்வாறு மாறியுள்ளது?

NA: டிஜிட்டல் ஜனநாயகம் குறித்த எனது புரிதல் மிகவும் நடைமுறை சார்ந்ததாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முன்பு, டிஜிட்டல் கருவிகள் முக்கியமாகத் தகவல்தொடர்பு அல்லது தகவல்களைப் பெறுவதற்கான ஒரு வழியாகவே பார்க்கப்பட்டிருக்கலாம்.

டிஜிட்டல் ஸ்பார்க்ஸ் மூலம், மக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தவும், பொதுச் சேவைகளைப் பெறவும், ஆதாரங்களைச் சேகரிக்கவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளவும், கூட்டாக ஒருங்கிணைந்து செயல்படவும் உள்ள திறனை டிஜிட்டல் கருவிகள் எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் என்பதை நான் கண்டேன்.

டிஜிட்டல் அணுகலில் அனைவரையும் உள்ளடக்குதல், பெண்களின் கூலியில்லா உழைப்பு, காலநிலை தொடர்பான தண்ணீர்ப் பிரச்சினைகள் மற்றும் குடிமக்கள் செயல்பாட்டுக்கான வெளி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பையும் நான் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

கிராமப்புறப் பெண்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திறன் என்பது தொழில்நுட்பத் திறன்களை மட்டும் குறிப்பதல்ல. தங்கள் குரலை வெளிப்படுத்துவது, பிரச்சினைகளை ஆவணப்படுத்துவது, தங்களது உரிமைகளைப் புரிந்துகொள்வது, குடும்பங்களையும் சமூகத்தையும் பாதிக்கும் முடிவுகளில் பங்கேற்பது ஆகியவையும் அதில் அடங்கும்.

GV: இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் பெற்றுச் செல்லும் மிகவும் மதிப்புமிக்க பாடங்களும் அனுபவங்களும் என்ன?

NA: மக்களின் உண்மையான அன்றாடத் தேவைகளுடன் நேரடியாக இணைக்கப்படும்போதுதான் டிஜிட்டல் அறிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே மிகவும் மதிப்புமிக்க பாடம். கிஸில்சாயில் தண்ணீர்ப் பற்றாக்குறை, விவசாய வேலை, கூலியில்லா பராமரிப்புப் பொறுப்புகள், பொதுச் சேவைகளைப் பெறுதல் ஆகிய பிரச்சினைகள்தான் டிஜிட்டல் கருவிகளைப் பொருத்தமானவையாகவும் பயனுள்ளவையாகவும் மாற்றின.

பெண்களுக்குத் தகவல்கள் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கூட்டு ஆதரவும் தேவை என்பது மற்றொரு முக்கியமான பாடம். பங்கேற்பாளர்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு, தங்களது உழைப்பின் மதிப்பைக் கணக்கிட்டு, நம்பகமான ஆதாரங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டபோது, உள்ளூர் அதிகாரிகளுடன் பேசவும் ஒன்றிணைந்து செயல்படவும் இன்னும் தயாரானார்கள்.

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்பதன் மதிப்பையும் இத்திட்டம் காட்டியது. இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைப் பங்கேற்பாளர்கள் நம்புவதற்கும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

GV: அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் பெற்ற கற்றலையும் வளர்த்துக்கொண்ட டிஜிட்டல் திறனையும் எதிர்காலப் பணியிலும் உங்கள் சமூகத்திலும் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

NA: பயிற்சி பெற்ற பங்கேற்பாளர்கள் அடிப்படை ஸ்மார்ட்போன் பயன்பாடு, eGov, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை ஆவணப்படுத்தும் திறன்களை கிஸில்சாயில் உள்ள மற்ற பெண்களுடன் படிப்படியாகப் பகிரும், சக பெண்கள் வழியான தொடர் பயிற்சி முறையை நாங்கள் தொடருவோம்.

கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்கு கூட்டுறவு அணுகுமுறையை உருவாக்கக் குழு திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள கூட்டுறவு, கூட்டாகக் கோரிக்கைகளை முன்வைத்தல், பகிர்ந்து கற்றல், புத்திசாலித்தனமான கிணறு அல்லது பகிர்ந்து பயன்படுத்தும் பாசனக் கட்டமைப்புக்கான நிதி வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும்.

கிராமப்புறப் பெண்களின் உழைப்பு, அறிவு மற்றும் தேவைகள் இன்னும் வெளிப்படையாகத் தெரியும்வகையில், எதிர்காலப் பணிகளிலும் டிஜிட்டல் திறன்களைப் பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தல், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் குடிமக்கள் பங்கேற்புடன் தொடர்ந்து இணைப்போம்.